அன்பு ஜோதி ஆசிரம வழக்கு- ராஜஸ்தானில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை!!
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின் பேபி. இவர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் நடத்தி வந்தார். இதனை அனுமதியின்றி நடத்தியதாகவும், அங்கு தங்கி உள்ள பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தல், அடைத்து வைத்து துன்புறுத்தல், பலர் மாயமானது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரம நிர்வாகியான ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா, ஊழியர்கள் உள்பட 9 பேரை கைது செய்தனர். இதில் வயது முதிர்வு காரணமாக தாஸ் மட்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மற்ற 8 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் கேட்டபோது கூறியதாவது:- ஆசிரமத்தில் தங்கி இருந்தவர்கள் யாரிடமும் உடல் உறுப்பு எடுக்கப்படவில்லை என்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து எந்தவித நிதியும் கடந்த சில ஆண்டுகளாக வரவு வைக்கப்படவில்லை என்பது தெளிவாகி உள்ளது. பெங்களூருவில் விசாரணை முடிவடைந்த நிலையில் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. காணாமல் போன இன்னும் சிலரை பற்றியும் விசாரணை செய்து வருகிறோம். அனைத்து விசாரைணயும் முடிவடைய இன்னும் ஒரு மாதமாகும. அதன் பின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.