வேளாங்கண்ணியில் இருந்து திருட்டுத்தனமாக நியூசிலாந்து செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 9 பேர் கைது!!
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து படகு மூலம் வெளிநாட்டுக்கு இலங்கை அகதிகள் திருட்டுத்தனமாக செல்ல இருப்பதாக நாகை மாவட்ட ‘கியூ’ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் வேளாங்கண்ணியில் உள்ள விடுதிகளில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள விடுதியில் தங்கியிருந்த தூத்துக்குடி மாவட்டம் குளத்துவாய்ப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த கேனுஜன்(வயது 34), கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி முகாமை சேர்ந்த ஜெனிபர்ராஜ்(23), தினேஷ்(18), புவனேஸ்வரி(40), செய்யாறு கீழ்புதுப்பாக்கம் முகாமை சேர்ந்த துஷ்யந்தன்(36), வேலூர் வாலாஜாப்பேட்டை குடிமல்லூர் அகதிகள் முகாமை சேர்ந்த சதீஸ்வரன்(32) ஆகிய 6 பேரை பிடித்து வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் 6 பேரும் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான பதிவு செய்யப்படாத விசைப்படகில் திருட்டுத்தனமாக வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல திட்டமிட்டதும், இதற்காக தங்களது முகாம்களில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு வந்து விடுதியில் தங்கி இருந்ததும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து இவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் 6 பேரிடம் இருந்து ரூ.17 லட்சத்தை ‘கியூ’ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் இவர்கள் 6 பேரும் நியூசிலாந்து நாட்டிற்கு திருட்டுத்தனமாக படகில் செல்ல முயன்றது தெரிய வந்தது.
இவர்கள் நியூசிலாந்து செல்வதற்கு சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அகதிகள் முகாமை சேர்ந்த வரதராஜன்(38), விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு முகாமை சேர்ந்த ரவிச்சந்திரன்(41), திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு முகாமை சேர்ந்த அன்பரசன்(29) ஆகிய 3 பேரும் சேர்ந்து உதவியதும், அவர்கள் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து ‘கியூ’ பிரிவு போலீசார் வேளாங்கண்ணியில் இருந்த வரதராஜன், ரவிச்சந்திரன், அன்பரசன் ஆகியோரை கைது செய்தனர். இதில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் 9 பேரிடமும் ‘கியூ’ பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.