குரங்குப் பணியாளர்களால் சரியும் சந்தை !!
குரங்குகளை வேலைக்குப் பயன்படுத்துவதால் உலகின் முக்கிய தென்னை சார் உற்பத்தி விநியோகஸ்த்தரான தாய்லாந்திடமிருந்து உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதை பெரும்பாலான சர்வதேச நிறுவனங்கள் தவிர்த்து வரும் நிலையில் , தனது தென்னை சார் உற்பத்தி ஏற்றுமதியை விரிவுபடுத்தக் கூடிய சந்தர்ப்பத்தை இலங்கை பெற முடியும்.
PETA அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளைத் தொடர்ந்து, வோல்மார்ட், கோஸ்ட்கோ, டார்கட் அன்ட் க்ரோகர் போன்ற உலகின் முக்கிய விற்பனையாளர்கள், வலுக்கட்டாயமாக குரங்குகளைப் பணியமர்த்துவதாக குற்றஞ்சாட்டப்பட்ட தாய்லாந்தைச் சேர்ந்த சில விநியோகஸ்தர்களிடமிருந்து தேங்காய்பால் உள்ளிட்ட தென்னை சார்ந்த உற்பத்திகளை கொள்வனவு செய்வதை ஏற்கனவே நிறுத்தியுள்ளனர்.
தாய்லாந்திலிருந்து தேங்காய்பால் எதுவும் இனி கிடைக்காது என ஜேர்மனியைச் சேர்ந்த உணவு விற்பனை செய்யும் பிரபல நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
தாய்லாந்தில் குறித்த துறையில் குரங்குகளைப் பயன்படுத்துவது பரவலாகக் காணப்படுவதாக PETA வின் மூன்றாவது ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தாய்லாந்திலிருந்து கொள்வனவு செய்வதை முற்றாக நிறுத்திவிட்டு, குரங்குகளைப் பயன்படுத்தாமல் தேங்காய்ப் பால் உற்பத்தி செய்யும் இலங்கை, டொமினிக்கன் குடியரசு, இந்தியா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்து கொள்வனவை செய்ய வேண்டும் என PETA நிறுவன பொறுப்பு இயக்குனர் லோரா ஷீல்ட், அமெரிக்காவின் செய்தித் தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்தார்.
தென்னை சார் உற்பத்திகளில் விசேடமாக தேங்காய் பால் உற்பத்தியில் உலக சந்தையில் இலங்கைக்கு சிறந்த சாத்தியக்கூறுகள் உள்ளன. இலங்கையின் தென்னை சார் உற்பத்திகளுக்கான சந்தையை விரிவு படுத்த இது சிறந்த சந்தர்ப்பமாகும்.
தாய்லாந்தின் உற்பத்திகளை பெரும்பான்மையாக கொள்வனவு செய்ததால் அமெரிக்க சந்தையில் தாய்லாந்தின் ஆதிக்கம் வலுவாக இருந்தது. தற்போதைய நிலைமையால் அமெரிக்க சந்தையின் ஆதிக்கத்தை இலங்கை தன்வசப் படுத்த முடியும்.
அமெரிக்க சந்தையில் குத்துமதிப்பாக 80 சதவிகிதம் தேங்காய்பாலுக்கான பங்குகளை தாய்லாந்து கொண்டிருந்ததுடன் அது 2020 ஆம் ஆண்டில் 78,000 டொன்கள் தேங்காய்பாலை ஏற்றுமதியும் செய்தது.
2022 ஆம் ஆண்டில் , இலங்கை 52,765 மெட்ரிக் டொன் தேங்காய்ப்பால் ஏற்றுமதி செய்து, ரூ.29,012 மில்லியன் வருமானத்தை ஈட்டியது. ஜனவரி 2023 இல், 4,421 மெட்ரிக் டொன் தேங்காய் பால் ஏற்றுமதி செய்யப்பட்டு, ரூ.2,491 மில்லியன் பெறப்பட்டது.