பூரியில் வணிக வளாகத்தில் பயங்கர தீவிபத்து- 106 பேர் பத்திரமாக மீட்பு !!
ஒடிசா மாநிலம் பூரியில் வணிக வளாகம் உள்ளது. இங்கு 40 கடைகள் உள்ளன. இங்கு முதல் தளத்தில் உள்ள ஒரு துணிக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடை முழுவதும் பற்றி எறிந்த தீ அருகில் உள்ள கடைகளுக்கும் பரவியது. வணிக வளாகத்தில் ஷாப்பிங் செய்து கொண்டு இருந்த ஏராளமான பொதுமக்கள் இதில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் அங்கும், இங்கும் அலறி அடித்து கொண்டு ஓடினர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தீ விபத்து ஏற்பட்ட வணிக வளாகம் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் அருகில் உள்ளது. வணிக வளாகம் அருகில் ஏராளமான ஓட்டல்களும், தங்கும் விடுதிகளும் உள்ளன. அங்கும் தீ பரவியது. மகாராஷ்டிரா, நாசிக்கில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தீ விபத்து ஏற்பட்ட வணிக வளாகம் அருகில் தங்கி இருந்தனர். சுமார் 106 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
நீண்ட போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்தநிலையில் பூரி பா.ஜனதா எம்.எல்.ஏ. ஜெயந்த் சாரங்கி, தீ விபத்து தடுப்புக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்யவில்லை என்று மாவட்ட நிர்வாகம் மீது குற்றம் சாட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.