100 நாள் வேலை திட்டத்தில் நிதி முறைகேடு- உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!!!
வெளிநாடுகளில் வேலை செய்பவர்களின் பெயர்களை சிவகங்கை மாவட்டம் கண்டதேவி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்து நிதி முறைகேடு நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக கண்டதேவி ஊராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கண்டதேவி ஊராட்சியைச் சேர்ந்த 2வது வார்டு உறுப்பினர் கருப்பையா இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊராட்சி தலைவரின் கணவர் பெயர், தாயார், உடன்பிறந்தவர்கள் பெயர் மற்றும் வெளிநாட்டில் வாழும் நபர்கள், கூட்டுறவு வங்கியில் வேலை பார்க்கும் நபர்களின் பெயர்களும் சேக்கப்பட்டுள்ளன. அவர்கள் வேலை செய்ததாக பெய்யாக கணக்கு காட்டி ஊராட்சி நிதியில் மோசடியில் செய்துள்ளனர்.
ஊராட்சி தலைவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு திட்டத்தின் கீழ் இலவச வீடுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறிய நீதிபதி தனது கருத்தை தெரிவித்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி 12 வாரங்களுக்குள் சட்டத்திற்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க சிவகங்கை ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.