மசோதாவை 2வது முறையாக நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை- சட்ட அமைச்சர் ரகுபதி பேட்டி!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. பட்ஜெட்டில் இடம் பெறும் திட்டங்கள், அவற்றுக்கு ஒதுக்கப்படும் நிதி பற்றி அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்ததார். அப்போது அவர் கூறியதாவது சட்ட மசோதாவை இரண்டாவது முறையாக நிராகரிக்க ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆன்லைன் ரம்மி சட்ட மசோதா விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆன்லைன் ரம்மி திறன் மேம்பாட்டு விளையாட்டு என கூறி ஆளுநர் நிராகரித்துள்ளார்.
திறமையின் அடிப்படையில் விளையாடக்கூடிய விளையாட்டு ஆன்லைன் ரம்மி இல்லை. ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் மீண்டும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த சட்ட மசோதா வரும் பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்படும். இந்த சட்ட விஷயத்தில் ஆளுநர் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளித்துள்ளோம். ஆன்லைன் ரம்மி விளையாடி 4 மாதத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த 12 பேர் உயிழப்புககு யார் காரணம்? இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.