3வது முறையாக சீன அதிபராக பதவியேற்றார் ஜி ஜின்பிங்!!
சீன அதிபராக ஜி ஜின்பிங் மீண்டும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று பதவியேற்றார். தொடர்ந்து 3வது முறையாக அவர் அதிபராக பதவியேற்றிருக்கிறார்.
சீன அதிபர் அந்நாட்டின் ஒற்றை அரசியல் கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் தேர்வு செய்யப்படுவார். அதன்படி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் ஜி ஜின்பிங் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். கட்சி அவரை ஒருமனதாக தேர்வு செய்தது. அதோடு, அவர், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவை அப்படியே அங்கீகரிக்கும் அந்நாட்டின் நாடாளுமன்றமான தேசிய மக்கள் காங்கிரஸ், ஜி ஜின்பிங்கை முறைப்படி அதிபராக தேர்வு செய்தது. இதையடுத்து, அவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சீன அதிபராக உறுதிமொழி ஏற்றார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனரான மவோவுக்குப் பிறகு 2 முறைக்கு மேல் சீன அதிபராகி இருக்கும் முதல் நபர் ஜி ஜின்பிங். இவர் தனது வாழ்நாள் முழுவதும் அந்நாட்டின் அதிபராக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபரில் கூடிய சின கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளராக ஜி ஜின்பிங் தேர்வாகி இருந்தார்.
சீன பிரதமரான லி கெகியாங்கின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதை முன்னிட்டு தேசிய மக்கள் காங்கிரசில் புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட உள்ளார். அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு மிகவும் நெருக்கமானவரான லி கியாங் அந்நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய மக்கள் காங்கிரசின் கூட்டம் வரும் 13ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில் அன்றைய தினம் புதிய பிரதமர் பத்திரிகையாளர்களை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.