நேபாள அதிபராக ராம்சந்திர பவுடேல் தேர்வு – விரைவில் பதவியேற்பு!!
நேபாளத்தில் சிபிஎன்-மாவோயிஸ்ட் மையம் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் உள்ளது. அந்த கட்சியின் தலைவர் பிரசண்டா பிரதமராக உள்ளார். இந்த சூழலில்
மார்ச் 9-ம் தேதி அதிபர் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. எதிர்க்கட்சியான நேபாளி காங்கிரஸ் சார்பில் ராம் சந்திர பவுடேலும், ஆளும் கூட்டணியை சேர்ந்த சிபிஎன்- யுஎம்எல் சார்பில் சுபாஷ் நெம்பாங்கும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர்.
திடீர் திருப்பமாக பிரதமர் பிரசண்டா எதிரணியை சேர்ந்த நேபாளி காங்கிரஸ் வேட்பாளர் ராம் சந்திர பவுடேலுக்கு ஆதரவு தெரிவித்தார். ஏற்கெனவே அறிவித்தபடி நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்ற மக்களவையை சேர்ந்த 275 எம்பிக்கள், மேலவையை சேர்ந்த 59 எம்பிக்கள், மாகாண சட்டப்பேரவைகளை சேர்ந்த 550 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். ஒரு எம்பியின் வாக்குமதிப்பு 79 ஆகவும் எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 48 ஆகவும் உள்ளது.
இதன்படி 884 எம்பி, எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பு 52,786 ஆக உள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் நேபாளி காங்கிரஸ் வேட்பாளர் ராம் சந்திர பவுடேல் 33,802 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவர் விரைவில் பதவியேற்க உள்ளார்.