நிதியை மறுத்தால் நீதியை அவமதித்ததாக செல்வோம்!!
“உள்ளூராட்மன்றத் தேர்தலுக்கான நிதியை வழங்குவதற்கு தொடர்ந்தும் நிதி அமைச்சு மறுக்குமாக இருந்தால் நீதிமன்றத்தை அவமதித்தமை குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றத்தை மீண்டும் நாடுவோம்” என ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (09) வியாழக்கிழமை நடைபெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்துக்கான பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் ஜனநாயகத்திற்கு பெரும் சவால் விடுக்கப்பட்டுள்ளது. மக்களின் வாக்குகளால் தெரிவாகும் நான்கு நிறுவனங்கள் உள்ளன. ஜனாதிபதி, பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் உள்ளன. ஏற்கெனவே மாகாண சபைகள் தேர்தல் நான்கு வருடங்களாக நடத்தப்படாதுள்ளது. அத்துடன் இம்மாதத்தில் உள்ளூராட்சி சபைகளை நியமிக்க வேண்டும்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி இல்லை. அரசியலமைப்பு ரீதியில் நியமிக்கப்பட்டவரே இருக்கின்றார். இதன்படி இப்போது மூன்று நிறுவனங்களுக்கான தேர்தல் நடத்தப்படாது இருக்கின்றன. அத்துடன் இந்த பாராளுமன்றமும் இப்போது மக்கள் ஆணையை இழந்துள்ளது என்றார்.