அனைத்து காலநிலையையும் தாங்கும் பலம்பொருந்திய வீடு.. உலகிலேயே முதன்முறையாக சோதித்து பார்க்கும் முயற்சி!!
உலகின் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே வருவதால் அனைத்து காலநிலைக்கும் ஏற்ற வீட்டை கட்டி அதை சோதித்து பார்க்கும் முயற்சியில் இங்கிலாந்து நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். உலகிலேயே முதன்முறையாக இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரில் சால்போர்டு பல்கலைக்கழக வளாகத்தில் இந்த வீடுகள் தற்போது ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுவாக கட்டுமான பொருட்களின் தாங்கு திறனை குறித்து தான் பரிசோதிப்போம். தற்போதைய தேவை மற்றும் எதிர்கால சிக்கல்களை கருத்தில் கொண்டு அனைத்து விதமான காலநிலையை தாங்கும் மாதிரி வீடுகளை நிபுணர்கள் உருவாக்கி உள்ளனர்.
தற்போது ஒரு பெரிய ஆய்வறையில் வைத்து அந்த 2 வீடுகள் சோதிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கொடுங்காற்று, கடும் பனி, கொதிக்கும் வெப்பம் மற்றும் உஷ்ணத்தை செலுத்தி இந்த வீடுகள் சோதிக்கப்பட்டு வருகின்றன. குறைந்தபட்ச வெப்பநிலை -20 டிகிரிக்கு கீழே சென்றாலும் அதிகபட்ச வெப்பம் 40 டிகிரி செல்ஷியசுக்கு மேல் சென்றாலும் இந்த வீடுகள் தாங்கும். பசுமை குடில் வாயுவை குறைப்பதே இதன் நோக்கம் என்று கூறும் நிபுணர்கள், உலகில் எந்த மூளையில் வேண்டுமானாலும் இது போன்ற பலம் வாய்ந்த வீடுகளை கட்டலாம் என்று தெரிவித்துள்ளனர்.