;
Athirady Tamil News

திருப்பதியில் பக்தர்கள் தங்கும் விடுதியில் பழமையான 842 அறைகள் இடிக்கப்படுகிறது!!

0

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் 1300 தங்கும் விடுதிகளில் 7,500 அறைகள் கட்டப்பட்டு உள்ளன. திருமலையில் உள்ள கட்டிடங்கள் பெரும்பாலானவை 30 முதல் 60 ஆண்டுகள் பழமையானது. இதனால் கதவு, ஜன்னல்கள் உடைந்தும், மேற்கூரைகள் சேதம் அடைந்தும் மழைக்காலங்களில் தண்ணீர் அறைகளுக்குள் ஒழுகுகின்றன.

இதனால் தரிசனத்திற்கு வந்து வாடகைக்கு அறை எடுத்து தங்கம் பக்தர்கள் சிரமம் அடைந்து வந்தனர். இது குறித்து பக்தர்கள் தேவஸ்தானத்தில் பல்வேறு புகார்களை அளித்தனர். இதையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் பழைய கட்டிடங்களான கல்யாணி, சுதர்சனம், கோவர்தன் ஆகிய கட்டிடங்களை ஆய்வு செய்து 30 முதல் 60 ஆண்டுகள் பழமையான கட்டிடங்களை இடிக்க முடிவு செய்துள்ளனர்.

சுதர்சன சத்திரத்தில் 396 அறைகளும், கல்யாணி சத்திரத்தில் 260 அறைகளும், கோவர்தனில் 186 அறைகளும் என 842 அறைகள் இடிக்கப்படுகிறது. அந்த கட்டிடங்களுக்கு பதிலாக அதே இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய கட்டிடங்களின் அறைகளில் குளியலறை, கழிவறை, கட்டில்கள், மேஜை, நாற்காலி வெந்நீர் வசதியுடன் கட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடங்களை இடிக்கும் பட்சத்தில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு அறைகள் பற்றாக்குறை ஏற்படும் என பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இடிக்கப்பட உள்ள கட்டிடங்களுக்கு பதிலாக பக்தர்கள் பாதிக்காத வகையில் உடனடியாக புதிய கட்டிடங்களை கட்டி பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளனர். திருப்பதியில் நேற்று 58,494 பேர் தரிசனம் செய்தனர். 24,025 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.19 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.