பட்டமளிப்பு விழாவில் குட்டிக்கரணம் அடித்து வந்து பட்டம் வாங்கிய சீன மாணவி!!
படித்தவர்களின் வீடுகளுக்கு செல்லும் போது அங்கு தலையில் குல்லா வைத்து கையில் சுருட்டிய சான்றிதழுடன் காட்சி அளிக்கும் புகைப்படங்களை கட்டாயம் பார்க்கலாம். வீட்டுக்கு வந்தவர்கள் அந்த படம் குறித்து கேட்டால் அவர்கள் கல்லூரி நாட்களை பற்றியும், படித்து முடித்து பட்டம் வாங்கிய தருணம் குறித்தும் மணிக்கணக்காக பேசதொடங்கி விடுவார்கள். அந்த அளவுக்கு மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவங்களில் பல்கலைக்கழகத்தில் பட்டம் வாங்கும் தருணம் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியை அளிப்பது உண்மை.
அந்த வகையில் இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்த சீன மாணவி சென் யினிங் பட்டமளிப்பு விழாவில் நடந்து கொண்ட விதம் உலக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. விழா மேடையில் பட்டம் வாங்க மாணவிகள் பலரும் வரிசையில் நின்றனர். சீன மாணவி சென் யினிங் பட்டம் வாங்க செல்லும் நேரம் வந்த போது அவர் திடீரென விழா மேடையில் குங்பூ ஸ்டைலில் குட்டிக்கரணம் அடித்தார்.
பட்டம் வழங்க இருந்த கல்வியாளர்கள் இதனை கண்டு ஆச்சரியமடைந்தனர். அதோடு அவர்கள் சீன மாணவி சென் யினிங்குக்கு சிரித்தபடி பட்டத்தை வழங்கினர். இந்த காட்சிகளை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றவர்கள் செல்போனில் பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பல லட்சம் லைக்குகளை அள்ளியது. வீடியோ காட்சிகளை பார்த்து சீன மாணவியை ஏராளமானோர் பாராட்டி வருகிறார்கள்.