கவர்னருக்கு எங்கிருந்து அழுத்தம் வந்தது?- சபாநாயகர் அப்பாவு கேள்வி!!
சபாநாயகர் அப்பாவு சென்னை கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு அதன் பிறகு கடந்த ஜூலை மாதம் அந்த அவசர சட்டத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் ஒரு சட்டமுன்வடிவு சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. கவர்னருக்கு என்னென்ன உரிமைகள் இருக்கிறது என்பதை உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறி இருக்கிறது. கவர்னர் விளக்கம் கேட்கலாம். சட்டமன்றத்தின் முடிவுக்கு அவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் விதி 200-ல் உள்ளது. சட்டமன்றம் புனிதமானது.
மாண்புடையது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. எனவே கவர்னர் திரும்பவும் படித்து பார்த்து இருக்க வேண்டும். தான் பயன்படுத்திய வார்த்தையை தவிர்த்து இருக்கலாம். ஆன்லைன் ரம்மி விளையாட்டு விவகாரத்தில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு நீதி இருக்கிறது. இது திறமை சார்ந்த விளையாட்டு. ஒன்றிய அரசின் பட்டியலில் உள்ளது என்று சட்ட ஆணைய விதி 276-ல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் மாநிலங்கள் பட்டியலில் விதி 34-ல் கேம் ஆப் சான்ஸ் என்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதை மறுத்து ஆன்லைன் ரம்மி நடத்தும் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்கு கவர்னரும் ஒப்புதல் அளித்தார். 2021 டிசம்பர் 3-ந்தேதி மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் வைகோ, கனிமொழி சோமு, சுசில் மோடி ஆகியோர் ஆன்லைன் ரம்மி தடை செய்ய வேண்டியதின் அவசியம் பற்றி பேசினார்கள். அப்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் இதை ஸ்கில்கேம் அல்ல. கில்கேம் என்று குறிப்பிட்டார்.
இது தொடர்பாக மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது மாநில பட்டியலில்தான் இருப்பதாக கூறப்பட்டது. 17 மாநிலங்களில் ஆன்லைன் ரம்மிக்கு எதிராக சட்டங்கள் உள்ளன. இவைகளின் அடிப்படையில்தான் 2022 அக்டோபர் 19-ந்தேதி சட்டமன்றத்தில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. அதுவும் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழு அமைத்து அந்த குழு 10,735 பேரிடம் கருத்து கேட்டது.
அதில் 10 ஆயிரத்து 708 பேர் முழுமையாக தடை செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருந்தனர். அதன் அடிப்படையிலேயே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சட்டங்களை அறிந்தும், தெரிந்தும் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தில் எந்த தவறும் இருந்ததாக தெரியவில்லை. கவர்னர் தீர ஆராய்ந்து முடிவு செய்திருக்க வேண்டும். அவசர சட்டத்துக்கு அனுமதி தந்து விட்டு இப்போது ஏன் எதிராக இருக்கிறார் என்பது தெரியவில்லை.
இதன் மூலம் கவர்னர் இந்த சட்டத்துக்கு எதிராகவே இருந்துள்ளதாக தெரிகிறது. ஆன்லைன் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் கவர்னரை சந்தித்து இருக்கிறார்கள். அது என்ன காரணம் என்று தெரியவில்லை. நமது சட்டத்துறை அமைச்சரும் கவர்னரை சந்தித்து விளக்கம் அளித்தார். எனவே ஒப்புதல் அளித்து விடுவார் என்று நம்பினோம். ஆனால் ஏதோ ஒரு அழுத்தத்தின் காரணமாக இந்த நிலைப்பாட்டை எடுத்திருப்பார் என்று தெரிகிறது. அது என்ன அழுத்தம் என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.