பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிரான பிடிவாரண்டு ரத்து!!
நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக 70க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், பிரதமராக இருந்தபோது கிடைத்த பரிசு பொருட்களை அரசிடம் ஒப்படைக்காமல் முறைகேடாக விற்ற வழக்கில் லாகூர் ஐகோர்ட்டு இம்ரான்கானுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்டை கடந்த மாத இறுதியில் பிறப்பித்தது. அதை தொடர்ந்து இம்ரான்கானை கைது செய்ய லாகூரில் உள்ள அவரது வீட்டுக்கு போலீசார் சென்றபோது அவர் தலைமறைவானார். எனினும் அதன் பின்னர் தொலைக்காட்சி வாயிலாக தொண்டர்களுக்கு உரையாற்றிய இம்ரான்கான் அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.
அதைத்தொடர்ந்து பலுசிஸ்தான் தலைநகர் குவெட்டாவில் உள்ள போலீஸ் நிலையத்தில், அரசுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக இம்ரான்கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனையடுத்து, இந்த வழக்கில் குவெட்டா நகர கோர்ட்டு இம்ரான்கானுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்தது. அதனை எதிர்த்து இம்ரான்கான் தரப்பில் பலூசிஸ்தான் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த பலுசிஸ்தான் ஐகோர்ட்டு இம்ரான்கானுக்கு எதிரான பிடிவாரண்டை ரத்து செய்து உத்தரவிட்டது.