சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து ஈரோடு பஸ், ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்!!
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை ஒரு போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ஈரோடு ரெயில் நிலையம் மற்றும் ஈரோடு பஸ் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அது இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கப் போவதாகவும் சொல்லிவிட்டு போனின் இணைப்பை துண்டித்து விட்டார். இது குறித்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதனால் உஷாரான போலீசார் உடனடியாக இன்று காலை ஈரோடு ரெயில் நிலையத்திற்கு சோதனையிட சென்றனர். மேலும் இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அவர்களுடன் மோப்பநாய் கயல் வரவழைக்கப்பட்டது. ரெயில் நிலையம் நுழைவாயில் பகுதி முதல் ஒவ்வொரு பகுதியாக சல்லடை போட்டு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர். மேலும் பயணிகள் உடமைகளும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு நடைமேடையிலும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை செய்தனர். ரெயில் நிலையத்தில் உள்ள கடைகள், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம், குப்பை கூடைகள், ரெயில்வே பணிமனை பகுதி என ஒவ்வொரு பகுதியாக தீவிரமாக சோதனை செய்தனர்.
அந்த சமயம் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்த ரெயில்களையும் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை செய்தனர். ரெயில் நிலையத்தில் திடீரென போலீசார் சோதனை செய்ததால் பயணிகள் பதற்றுத்துடன் காணப்பட்டனர். இதேபோல் டவுன் இன்ஸ்பெக்டர் தேவராணி தலைமையில் போலீசார் ஈரோடு பஸ் நிலையத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். இன்று காலை ஈரோடு பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
திடீரென போலீஸ் படையை பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஈரோடு பஸ் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு ரேக்குகளையும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவிக்கொண்டு சோதனை செய்தனர். மேலும் மோப்ப நாய் கயலும் வரவழைக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியாக அதுவும் சோதனை செய்தது. மினி பஸ் ரேக், டவுன் பஸ் ரேக், சேலம், நாமக்கல் பஸ்கள் வந்து செல்லும் ரேக், மதுரை, திருச்சி பஸ் ரேக், சென்னை கோயம்புத்தூர் சத்தியமங்கலம் பஸ்கள் வந்து செல்லும் ரேக் என தனித்தனியாக ஒவ்வொரு பகுதியாக போலீசார் சோதனையிட்டனர்.
பஸ் நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பிடத்திலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். பஸ் நிலையத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரமாக இந்த சோதனையும் நடந்தது. சோதனை முடிவில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மணிக்கூண்டு பகுதிக்கும் போலீசார் சென்று சோதனை செய்தனர்.
அங்கு பொதுமக்கள் வியாபாரிகள் அதிக அளவில் கூடுவதால் அங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையிலும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதன் பிறகே போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைகளால் ஈரோடு நகரமே இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.