ஜவுளி கடையில் கார் திருடிய 2 பேர் கைது- சி.சி.டி.வி. காட்சியை கைப்பற்றி போலீசார் அதிரடி நடவடிக்கை!!
களியக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் பென்சாம் (வயது 69). இவர், நாகர்கோவிலில் உள்ள ஒரு பிரபல ஜவுளி கடை ஒன்றில் துணி எடுக்க வந்திருந்தார். அப்போது தனது காரை கடையில் நிறுத்திவிட்டு துணி எடுக்க சென்றார். காரை நிறுத்தியதற்கான டோக்கனையும் பெற்று சென்றிருந்தார். சிறிது நேரம் கழித்து பென்சாம் வீட்டுக்கு செல்வதற்காக காரை எடுக்க வந்தார். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மாயமாகி இருந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பென்சாம் இதுகுறித்து கடை ஊழியர்களிடம் கேட்டார். இதையடுத்து கடை ஊழியர்கள் பென்சாம் காரை தேடினார்கள். எங்கு தேடியும் கார் கிடைக்கவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கார் மாயமானது குறித்து நேசமணி நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேசமணி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது பென்சாம் காரை நிறுத்தி சென்ற பிறகு இரண்டு வாலிபர்கள் அவரது காரை திருடி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் காரை திருடி சென்றது ஏற்கனவே அதே துணிக்கடையில் வேலை பார்த்த இறச்சகுளத்தை சேர்ந்த ராஜா மற்றும் அவரது நண்பர் ராஜன் என்பது தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். நாகர்கோவில் நகர் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். கார் மாயமானது குறித்த தகவல் அனைத்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வடசேரி பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது ஜவுளி கடையில் திருடப்பட்ட கார் வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தினார்கள். காரை ஓட்டி வந்த ராஜா, ராஜனையும் போலீசார் பிடித்தனர். இருவரும் பிடிபட்டது குறித்து நேசமணி நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிடிபட்ட ராஜா, ராஜன் இருவரையும் மீட்கப்பட்ட காரையும் நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் ராஜா, ராஜன் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்ட விசாரணையில் ராஜா ஏற்கனவே அந்த ஜவுளி கடையில் வேலை பார்த்ததாகவும் டோக்கனை மாற்றி கொடுத்து காரை குடிபோதையில் எடுத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருடப்பட்ட காரை ஒரு மணி நேரத்தில் மீட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டி உள்ளனர். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் துணிக்கடையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.