திருப்பூரில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு கஞ்சா சப்ளை செய்த 2 போலீஸ்காரர்கள் கைது!!
திருப்பூர் மாவட்டம், பல்லடம் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் சரவணன், (35). இவர், கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக, கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், இவரை சஸ்பெண்ட் செய்தார். இந்த நிலையில் போலீஸ்காரர் சரவணன் திடீரென தலைமறைவானார். தலைமறைவாக இருந்த இவரை, தேவகோட்டை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட போலீஸ்காரர் சரவணனிடம் விசாரித்த போது அவர் அளித்த தகவலின் பேரில், பல்லடம் போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்து வரும் மற்றொரு காவலர் அருண்பாண்டி, (33) என்பவருக்கும் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ததில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸ்காரர் அருண் பாண்டியும் கைது செய்யப்பட்டார் .
கைது செய்யப்பட்ட இரண்டு போலீசாரிடமும் விசாரணை நடத்திய போது ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி., பட்டணம் பகுதியை சேர்ந்த பிரவீன், ராஜேந்திரன் ஆகியோருக்கு, பல்லடத்தை சேர்ந்த போலீஸ்காரர்கள் சரவணன், அருண்குமார் ஆகியோர் கஞ்சா சப்ளை செய்து வந்துள்ளனர்.
இவர்களுக்கு திருப்பூரில் இருந்து பல்வேறு நபர்கள் கஞ்சா கொடுத்துள்ளனர். அதனை பதுக்கி வைத்து பல்வேறு மாவட்டங்களுக்கு சப்ளை செய்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட இரண்டு போலீஸ்காரர்களையும் சிறையில் அடைத்தனர். கஞ்சா வியாபாரிகளின் நடமாட்டத்தை கண்டறிந்து, மக்களை பாதுகாக்க வேண்டிய போலீசாரே கஞ்சா விற்று வந்தது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.