ஸ்வப்னா மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம்- மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பேட்டி!!
வளைகுடா நாட்டில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு தங்கம் கடத்தி வரப்பட்டது. இந்த வழக்கில் கேரளாவில் தகவல் தொழில்நுட்ப துறையில் அதிகாரியாக இருந்த ஸ்வப்னா கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் இருக்கும் ஸ்வப்னா சமீபத்தில் தனது முகநூலில் பேட்டி அளித்தார். அதில் தங்க கடத்தல் ஆதாரங்களை அளித்தால் தனக்கு ரூ.30 கோடி பணம் தருவதாக விஜேஸ் பிள்ளை என்பவர் தெரிவித்ததாக கூறியிருந்தார்.
விஜேஸ் பிள்ளையை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கோவிந்தன் அனுப்பியதாகவும் கூறியிருந்தார். ஸ்வப்னாவின் குற்றச்சாட்டை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கோவிந்தன் மறுத்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- யாரோ தயாரித்து கொடுத்த உரையை ஸ்வப்னா படித்துள்ளார். இதன் பின்னணியில் அரசியல் சதி உள்ளது என்பது எங்களுக்கு தெரியும். எனவே இந்த குற்றச்சாட்டை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம். விஜேஸ் பிள்ளை யார் என்றே தெரியாது. இங்கு பிள்ளை என்று யாரும் இல்லை, எனக் கூறினார்.
இதுபோல விஜேஸ்பிள்ளையும், ஸ்வப்னாவின் குற்றச்சாட்டை மறுத்தார். மேலும் கோவிந்தனை தனக்கு தெரியாது எனவும் கூறினார். கோவிந்தன் மற்றும் விஜேஸ் பிள்ளை இருவரும் ஸ்வப்னாவின் குற்றச்சாட்டை மறுத்து இருப்பது குறித்து ஸ்வப்னா கூறியதாவது:- நான் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மை. இது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் விசாரணை அமைப்புகளுக்கும், கோர்ட்டுக்கும் அனுப்பி விட்டேன். அவர்களின் விசாரணையில் உண்மை தெரியவரும் என்றார்.