பின்லாந்து பிரதமர் சன்னா மரின் உக்ரைனுக்கு திடீர் பயணம்!!
உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி தனது ராணுவ நடவடிக்கைகளை தொடங்கியது. ரஷிய படைகளின் தாக்குதல்களை உக்ரைன் பாதுகாப்பு படை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவி மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன. உக்ரைனின் உள்கட்டமைப்புகளை தகர்க்கும் நோக்கில் ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் உக்ரைனில் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டு இருளில் மூழ்கியுள்ளது. சர்வதேச நாடுகளில் தங்களுக்கு மேலும் ராணுவ உதவிகளை வழங்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்து வருகிறார். இந்நிலையில், போர் நடந்து வரும் சூழ்நிலையில் உக்ரைனுக்கு பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மரின் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவரை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்று உரையாடினார். ஓராண்டு கால போரில் உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் வழங்கியதற்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பின்லாந்திற்கு நன்றி தெரிவித்தார்.