காஷ்மீர் விவகாரத்தில் விடா முயற்சி: பாக். வெளியுறவு துறை அமைச்சர் சொல்கிறார்!!
காஷ்மீர் விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பதற்காக விடா முயற்சி எடுத்து வருவதாக பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, பேசுகையில், ‘‘காஷ்மீர் விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்ச்சி நிரலில் முக்கியமான ஒன்றாக எடுத்து செல்வதற்காக பாகிஸ்தான் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் தலைப்புக்களை, நிகழ்ச்சிகளை பொருட்படுத்தாமல் ஒவ்வொரு முறையும் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் எழுப்புகிறது.
ஆனால் காஷ்மீரை இந்தியா-பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு பிரச்னையாக கருதும் வகையிலான ஆதரவை பெறுவதில் தோல்விஅடைகிறோம். காஷ்மீர் பிரச்னை எழுப்பப்படும்போதெல்லாம் நமது நண்பர்கள், நமது அண்டை நாடுகள் கடுமையாக ஆட்சேபனை தெரிவித்து உண்மைக்கு புறம்பான கதையை நிலைநிறுத்துகிறார்கள். உண்மையை அவர்கள் புரிந்துகொள்வது கடினம் என்றாலும், நாங்கள் விடா முயற்சியுடன் இருக்கிறோம்” என்றார். இந்தியாவை அண்டை நாடு என்று கூறுவதற்கு முன்னதாக நட்பு நாடு என்று கூறி பிலால் தடுமாறினார்.