விடுமுறைநாளையொட்டி பழனியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் !!
தமிழ்கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வருடம் முழுவதும் திருவிழா கோலம் பூண்டிருக்கும் பழனிக்கு காவடி எடுத்தும், பாதயாத்திரையாக வந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசிக்க வருகின்றனர். விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நாளை தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு தொடங்க உள்ளது. எனவே நல்ல முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என முருகனை வேண்டி வழிபட குடும்பத்துடன் வந்திருந்தனர்.
இதனால் அடிவாரம், கிரிவீதிகள், மின்இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் நிலையம், திருஆவினன்குடி கோவில் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் குவிந்தனர். மலைக்கோவிலுக்கு படிப்பாதை மற்றும் யானைப்பாதை வழியாகவும், பக்தர்கள் நடந்து சென்றனர். கூட்டம் அதிகரித்ததால் சுமார் 2 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று முகூர்த்த தினம் என்பதால் அடிவார பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பகல் பொழுதில் கடுமையான வெயில் சுட்டெரித்த போதும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.