;
Athirady Tamil News

பகிடிவதையால் தலைமறைவான யாழ்.மாணவன் மீட்பு – உயிர்மாய்க்க முயன்றதாகவும் தெரிவிப்பு!!!

0

யாழ்ப்பாணத்தில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக மாணவன் பகிடிவதைக்கு உள்ளாகி மனம் நொந்த நிலையிலையே வீட்டை விட்டு வெளியேறி இருந்ததாகவும் , குறித்த மாணவன் உயிர் மாய்க்க முயன்றுள்ளதாகவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் காணாமல் போனதாக வீட்டாரினால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில், தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் இளைஞன் ஒருவர் தங்கி இருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் இளைஞரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன் போது கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குள் காணாமல் போன பல்கலைக்கழக மாணவன் என கண்டறிந்தனர்.

அதை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் , பல்கலை கழகத்தில் தான் கடுமையாக பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டேன் எனவும் , தினமும் மாலை 06 மணி முதல் இரவு 10 மணி வரையில் சிரேஷ்ட மாணவர்களுடன் தொலைபேசியில் உரையாட கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் , “சிரேஷ்ட மாணவர்களுக்கு மரியாதை கொடுப்பேன்” என ஆயிரம் தடவைகள் எழுத பணிக்கப்பட்டதாகவும் அந்த கொடுமைகள் சித்திரவதைகள் தாங்காது , பல்கலை கழகத்தில் இருந்து வீடு திரும்பியதாக மாணவன் கூறியுள்ளான்.

அதேவேளை , தான் மீண்டும் பல்கலைக்கழகம் செல்ல மாட்டேன் என கூறி வீட்டில் தங்கியிருந்த வேளை, யாழ்ப்பாணம் வந்த இரு சிரேஷ்ட மாணவர்கள் தன்னை அழைத்து சென்று தனிமையான இடத்தில் வைத்து தாக்கி வீட்டிற்கு செல் எனவும் மீண்டும் பல்கலைக்கழகம் வா என்றும் மிரட்டி சென்றதாகவும் மாணவன் கூறியுள்ளான்.

அதனால் தான் பயத்தில் வீட்டை விட்டு வெளியேறி காங்கேசன்துறை கடற்பகுதிக்கு சென்று 2 நாட்கள் அநாதரவாக திரிந்ததாகவும் , பின்னர் அங்கிருந்து தெல்லிப்பளை பகுதியில் உள்ள ஆட்கள் அற்ற வீடொன்றில் 2 நாட்கள் தங்கி இருந்தேன் எனவும் விசாரணைகளில் தெரிவித்துள்ளான்.

மாணவின் கைகள் மற்றும் கழுத்து பகுதிகளில் வெட்டு காயங்களும் காணப்படுகின்றன. தனது உயிரை மாய்க்க முயன்று இருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்துள்ள நிலையில் மாணவனை சட்ட வைத்திய அதிகாரி முன் மருத்துவ பரிசோதனைக்காக முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.