ஈரோடு மாவட்டம் பவானியில் பயங்கரம்- கொதிக்கும் எண்ணையை வாலிபர் மீது ஊற்றிய கள்ளக்காதலி கைது!!
ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரம் 5-வது வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (26). இவர் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது உறவினர் பூபதி. இவரது மனைவி மீனா தேவி(27). இவர்கள் பவானி மீனாட்சி கல்யாண மண்டபம் வீதியில் வசித்து வருகின்றனர். கார்த்திக்-மீனா தேவி ஆகியோர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஒன்றாக படித்தனர். அப்போதே அவர்களுக்கு இடையே பழக்கம் இருந்தது. இந்நிலையில் மீனா தேவிக்கு பூபதியுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கார்த்திக் அடிக்கடி பூபதியின் வீட்டிற்கு சென்று வந்தார். அப்போது கார்த்திக்கும் மீனா தேவிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. உறவினர் என்பதால் கார்த்திக் வந்து சென்றதை அவரது கணவர் கண்டு கொள்ளவில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி கார்த்திக்-மீனாதேவி கள்ள தொடர்பை தொடர்ந்தனர்.
இந்நிலையில் கார்த்திக்குக்கும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இது பற்றி தெரிய வந்ததும் மீனா தேவி அதிர்ச்சி அடைந்தார். அவர் கார்த்திக்கை தொடர்பு கொண்டு வீட்டிற்கு அழைத்தார். அதன்படி நேற்று மதியம் கார்த்திக் மீனா தேவி வீட்டிற்கு வந்தார். அப்போது மீனாதேவி என்னுடன் உள்ள தொடர்பை துண்டித்து விட்டு எப்படி நீ வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்டு உள்ளார். மேலும் இது தொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மீனா தேவி தனது வீட்டில் கொதித்து கொண்டு இருந்த பாமாயில் எண்ணையை கார்த்திக் மீது ஊற்றினார். இதில் அவரது கழுத்து, முகம், இடது கை தோள்பட்டையில் தீ காயம் ஏற்பட்டது. இதனால் வலி தாங்கமுடியாமல் கார்த்திக் அலறி துடித்தார்.
பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கொதிக்கும் எண்ணையை ஊற்றியதில் கார்திக்குக்கு 15 சதவீத தீக்காயம் ஏற்பட்டது. சம்பவம் பற்றி தெரிய வந்ததும் பவானி போலீசார் விரைந்து சென்று கார்த்திக்கிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நடந்த விவரங்களை தெரிவித்தார். இதையடுத்து தலைமறைவான மீனாதேவியை போலீசார் தேடினர். அப்போது அவர் ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பவானி, கருங்கல்பாளையம் போலீசார் விரைந்து சென்று மீனா தேவியை கைது செய்தனர். பின்னர் பவானி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார் அதில் அவர் கூறி இருப்பதாவது: நானும் கார்த்திக்கும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஒன்றாக படித்தோம் அப்போதே எங்களுக்குள் பழக்கம் இருந்தது.
இந்நிலையில் அவரது உறவினரான பூபதியை திருமணம் செய்த பின்பும் எங்களுக்குள் தொடர்பு இருந்தது. இதனால் நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி பழகி வந்தோம். இந்த நிலையில் திடீரென அவர் என்னுடன் உள்ள தொடர்பை துண்டித்து விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்ததால் நான் அதிர்ச்சி அடைந்தேன். இதையடுத்து அவரை வீட்டிற்கு அழைத்து இது தொடர்பாக பேசினேன். அப்போது அவருக்கும் எனக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நான் வீட்டில் சமையல் அறையில் கொதித்துக் கொண்டு இருந்த பாமாயில் எண்ணையை எடுத்து அவர் மீது கொட்டினேன் என்று கூறினார். இதை யடுத்து போலீசார் மீனா தேவியை கைது செய்து நீதிபதி வீட்டில் ஆஜர்ப டுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.