காரைக்குடியில் வியாபாரியை காரில் கடத்தி 1½ கிலோ தங்கம்-ரூ.2½ கோடி பறிப்பு !!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சோமுபிள்ளை தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் காரைக்குடியில் உள்ள நகை கடைகளுக்கு மொத்தமாக தங்கம் மற்றும் தங்க நகைகளை வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் ரவிச்சந்திரன் சென்னை சென்று தங்க நகைகளை வாங்கி கொண்டு ஒரு பஸ்சில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் காரைக்குடி வந்தார். அவரிடம் ரூ.1½ கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.2½ கோடி ரொக்கம் இருந்தது. அவர் கழனிவாசல் பகுதியில் சென்றபோது ஒரு சொகுசு காரில் காக்கி பேண்ட், வெள்ளை சட்டை அணிந்து டிப்-டாப்பாக சில மர்ம நபர்கள் வந்தனர்.
அவர்கள் ரவிச்சந்திரனிடம் போலீசார்போல் நடித்து அவரை காரில் ஏறும்படி கூறினர். அவர்கள் போலீசார் என நினைத்து ரவிச்சந்திரனும் காரில் ஏறினார். இதைத்தொடர்ந்து அவர்கள் திருமயம் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு ரவிச்சந்திரனை அழைத்துச் சென்று அவர் வைத்திருந்த ரூ.1½ கிலோ தங்கம் மற்றும் ரூ.2½ கோடி ரொக்கம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அவரை தனியாக விட்டு விட்டு காரில் தப்பி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் நகைக்கடை உரிமையாளர்களுக்கு போன் செய்து மர்ம நபர்கள் தன்னை கடத்தி நகை மற்றும் பணத்தை பறித்து சென்று விட்டதை தெரிவித்தார். இதுபற்றி நகைக்கடை உரிமையாளர்கள் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில் சம்பவ இடம் விரைந்து சென்ற போலீசார் ரவிச்சந்திரனை மீட்டு அவரை காரில் கடத்தி சென்று நகை-பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் அவரை கடத்தி சென்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து மர்ம கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்ற னர். காரைக்குடியில் வியாபாரியை கடத்தி சென்று மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை பறித்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.