வடமாநில தொழிலாளர்கள் தாக்கபடுவதாக போலி வீடியோ வெளியிட்ட ஜார்கண்ட் வாலிபர் கைது!!
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவிய வதந்தியால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் வட மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. அவர்களின் அச்சத்தை போக்கும் விதமாக தமிழகத்தின் கோவை, திருப்பூர் மற்றும் சென்னையில் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஐஏஎஸ் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர். இதனிடையே வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் போலியான வீடியோக்கள் குறித்து மாநகரில் மூன்று பேர் மீதும் திருப்பூர் மாவட்ட போலீசார் இரண்டு பேர் மீது என 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஸ்குமார் (25) என்பவருடைய ட்விட்டர் கணக்கில் வேறு மாநிலங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை தமிழகத்தில் நடந்தது போன்று போலியான வீடியோக்களை சித்தரித்து பதிவிட்டிருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ் குமார் என்பவரை கைது செய்தனர். திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய நபர்கள் மீது திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலியாக வீடியோ வெளியிட்டது தொடர்பாக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாத் குமார் (23) என்பவரை திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த நபரை திருப்பூர் அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.