மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளாவில் மீண்டும் உயர்வு: கொரோனா தினசரி பாதிப்பு 500-ஐ தாண்டியது!!
இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 524 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. கடந்த 9-ந்தேதி பாதிப்பு 379 ஆக இருந்தது. சுமார் 3½ மாதங்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு கடந்த 10-ந்தேதி 400-ஐ தாண்டி இருந்தது.
அதாவது அன்று ஒரே நாளில் 441 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு இருந்தது. நேற்று பாதிப்பு 456 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இன்றும் பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த நவம்பர் 19-ந்தேதி பாதிப்பு 556 ஆக இருந்தது. அதன் பிறகு தற்போது மீண்டும் 500-ஐ தாண்டி உள்ளது. நேற்று அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 114 பேரும், கர்நாடகாவில் 102 பேரும், கேரளாவில் 87 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 90 ஆயிரத்து 492 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 311 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 56 ஆயிரத்து 93 ஆக உயர்ந்து உள்ளது. தொற்று பாதிப்புடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது.
அந்த வகையில் தற்போது 3,618 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது நேற்றை விட 212 அதிக மாகும். தொற்று பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு இல்லை. அதே நேரம் கேரளாவில் விடுபட்ட பலி எண்ணிக்கை 1-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,781 ஆக உயர்ந்துள்ளது.