நெய்வேலி அருகே போலீஸ் வேன் தீப்பிடித்து எரிந்தது !!
கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த போலீசார் நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பணி முடிந்ததும் இரவு அவர்கள் அங்குள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்கினர்.
தாங்கள் வந்த போலீஸ் வேனை வடக்குத்து போலீஸ் நிலையம் அருகே நிறுத்தி இருந்தனர். இன்று அதிகாலை 4 மணியளவில் அந்த வேனின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அதிரடிப்படையினருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் இணைந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அவர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
ஆனாலும் வேனின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீப்பிடித்து எரிந்த வேனை பார்வையிட்டார். வேனின் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் யாராவது வேனுக்கு தீ வைத்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்குத்து பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.