கிடா வெட்டு நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய புதுமண தம்பதி விபத்தில் பலி!!
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் மகள் ராகினி (வயது 32). இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம் சிறுவயலூர் கிராமத்தைச் சேர்ந்த தெய்வீகராஜன் மகன் செந்தில்குமார் (33) என்பவருக்கும், கடந்த 22.8.2022 அன்று திருமணம் நடைபெற்றது. புதுமண தம்பதியினர் இருவரும், ராகினியின் தாய் வீட்டிற்கு நேற்று இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். பின்னர் அங்கு நடைபெற்ற கிடா வெட்டு திருவிழாவில் கலந்து கொண்டனர். தொடர்ந்து கறிவிருந்து சாப்பிட்ட பின்னர் உறவினர்களிடம் கூறிவிட்டு மீண்டும் பெரம்பலூர் நோக்கி புறப்பட்டனர்.
அவர்கள் திருச்சி நெம்பர் 1 டோல்கேட் வழியாக சென்னை பைபாஸ் சாலையில் செல்ல திட்டமிட்டு இருந்தனர். முன்னதாக அவர்கள் ஆங்கரை பகுதியில் வந்தபோது, திருச்சியில் இருந்து அரியலூர் நோக்கி சென்று கொண்டிருந்த பாரம் ஏற்றிச்சென்ற லாரி இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட தம்பதியினர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த லால்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொற்செழியன் தலைமையிலான போலீசார் விபத்தில் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்களின் உடல்களை பார்த்து இரு வீட்டாரின் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரியை ஓட்டி வந்த கோயம்புத்தூர் காந்திபுரம் பீளமேடு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் பிரபாகரனை (40) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.