அமெரிக்காவில் கடத்தல் படகுகள் கவிழ்ந்து 8 பேர் பலி!!
அமெரிக்காவில் உள்ள சான்டீகோ கறுப்பு கடற்கரை பகுதிகளில் படகுகளில் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்தாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்நிலையில் 2 கடத்தல் படகுகளில் சுமார் 15 பேர் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தனர். அப்போது கடும் பனிமூட்டம் இருந்ததால் அந்த படகுகள் கடலின் ஆழம் குறைந்த பகுதிக்கு சென்றுவிட்டது. திடீரென அந்த 2 படகுகளும் கவிழ்ந்துவிட்டது. இதனால் அதில் பயணம் செய்த 15 பேரும் தண்ணீரில் மூழ்கினார்கள். இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இது பற்றி அறிந்ததும் கடலோர மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். படகு கவிழ்ந்த பகுதியில் கடும்பனி நிலவியதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பிறகு இறந்த 8 பேரின் உடல்களை அவர்கள் மீட்டனர். மற்றவர்கள் என்ன ஆனார்கள் என தெரியவில்லை. அந்த பகுதியில் கடலின் ஆழம் குறைவாக இருந்ததால் அவர்கள் நீந்தி உயிர் தப்பி இருக்கலாம் என தெரிகிறது. இதில் சில பெண்கள் இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.