அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது- நிர்மலா சீதாராமன் பதில்!!
அதானி குழுமத்தின் பங்குகள் மோசடியாக பங்கு சந்தைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது என அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்து இருந்தது. அதானி குழுமத்தின் பெருமளவு கடன்கள் குறித்தும் அந்த நிறுவனம் விரிவாக வெளியிட்டு இருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த நிலையில் அதானி குழுமத்துக்கு வங்கிகள் வழங்கியுள்ள கடன் விவரங்கள் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. தீபக் பாய்ஜ் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளார். அந்த பதிலில் நிர்மலா சீதாராமன் கூறி இருப்பதாவது:- அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது. ரிசர்வ் வங்கி சட்டத்தின்படி எந்த வொரு நிறுவனத்தின் கடன் விவரங்களையும் வழங்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.