;
Athirady Tamil News

போராட்டத்தில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கமும் முழுமையாக இணைகின்றது – சரா.புவனேஸ்வரன்!!

0

மார்ச் 15ஆந் திகதி நாடளாவிய ரீதியாக இடம்பெறவுள்ள போராட்டத்தில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கமும் முழுமையாக இணைகின்றது என அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், அடக்குமுறைகளையும் வரிச்சுமைகளையும், விலைவாசி உயர்வுகளையும், கட்டணங்களின் அதிகரிப்புகளையும் எதிர்த்து நாடளாவிய ரீதியில் அனைத்துத் தொழிற்சங்கங்களும் இணைந்து நடாத்துகின்ற ஜனநாயகப் போராட்டத்தில் இலங்கைத்
தமிழர் ஆசிரியர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

அரசாங்கத்தின் தவறான வரிவிதிப்பு, மின்சாரக் கட்டண உயர்வு, வாழ்க்கைச் செலவு பன்மடங்கு அதிகரிப்பு, மக்களின் ஜனநாயக உரிமையை மறுத்தல், ஜனநாயக போராட்டங்கள் நசுக்கப்படுகின்றமை போன்ற அனைத்துத் தரப்பினரதும் சொல்லொணா துன்பங்களை அரசாங்கம் கருத்தில் கொள்ளாததைக் கண்டித்து நடைபெறும் நடாளாவிய போராட்டத்தோடு அதிபர்கள், ஆசிரியர்களின் பல்வேறு பிரச்சனைகளை அரசாங்கம் தீர்க்காது தட்டிக் கழிப்பதையும் இணைத்து இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் போராட்டத்தில் இணைந்துகொள்கின்றது.

அதிபர் ஆசிரியர்களின் வேதன முரண்பாடுகள் இன்னமும் தீர்க்கப்படாமை, பாடசாலை செல்வதற்கான போக்குவரத்து செலவு அதிகரிப்பு, வங்கி கடன் வட்டி வீதங்களின் அதிகரிப்பு, மாணவர்களின் போசாக்கு குறைபாடு, கற்றல் உபகரணங்களின் விலை உயர்வு, பொதுப் பரீட்சை மதிப்பீட்டின் முக்கியத்துவத்தை உணராமை, அதற்கான கொடுப்பனவுகளை அதிகரிக்காமை போன்ற கல்விப்புல பிரச்சனைகளையும்
முன்வைத்து எதிர்வரும் 15ஆந் திகதி புதன்கிழமை நடளாவிய போராட்டத்தில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முழுமையாக இணைந்து கொள்வதோடு அன்றைய நாள் அதிபர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பாடசாலைக்குச் செல்லாது தமது எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுக்கின்றது – என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.