;
Athirady Tamil News

மலையகத்திற்கான தனி வீட்டு திட்டத்தினை அமுல்படுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து!!

0

நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த இந்திய வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக மேலதிக நிதியை வழங்குவதற்கு இந்தியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்பு திட்டத்தில் ஒரு வீட்டுக்கு 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபா ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்டிருந்தது.

எனினும், பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் தற்போது ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கு சுமார் 28 லட்சம் ரூபா அவசியம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 4 ஆயிரம் தனி வீட்டு திட்டத்தை முழுமைப்படுத்துவதற்காக, அத்திட்டத்தில் எஞ்சியுள்ள வீடுகளை புதிய மதிப்பீட்டு விலையின்கீழ் நிர்மாணிப்பதற்கான உடன்படிக்கை இன்று (13) கைச்சாத்திடப்பட்டது.

இதற்கான நிகழ்வு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தலைமையில் இந்திய இல்லத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான்,

” 2020 ஆம் ஆண்டில் நான் இராஜாங்க அமைச்சராக பதவியேற்கும்போது இந்தியாவின் 4 ஆயிரம் வீட்டு திட்டம் அமுல்படுத்தப்பட்டு வந்தது. 699 வீடுகளே முழுமைப்படுத்தப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டிருந்தது. சுமார் 2 ஆயிரம் வீடுகளில் மின்சாரம், நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருக்கவில்லை. அவற்றை முழுமைப்படுத்தி பயனாளிகளிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுத்தேன்.

இதற்கிடையில் கொரோனா அதன்பின்னர் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் இந்திய வீட்டு திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இக்கால கட்டத்தில் 3 ஆயிரம் ரூபா வரை சீமெந்து விலை அதிகரிக்கப்பட்டது. அன்று ஒரு வீட்டுக்கு 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போதைய சூழ்நிலையில் 28 லட்சம் ரூபா அவசியம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விலையின்கீழ் எஞ்சியுள்ள வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் இன்று (13.03.2023) கைச்சாத்திடப்பட்டமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இது முழுமைப்படுத்தப்பட்ட பின்னர் 10 ஆயிரம் வீட்டு திட்டமும் வெகுவிரைவில் அமுல்படுத்தப்படும்.” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.