35 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த பள்ளி தோழர்களின் ‘ரி யூனியன்’ நிகழ்ச்சியில் சந்தித்த காதலர்கள் திடீர் தலைமறைவு!!
ஒவ்வொருவருக்கும் பள்ளியில் படித்த காலத்தில் நடந்த பசுமையான நிகழ்ச்சிகளை நினைத்து பார்த்தால் ஏற்படும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. படித்து முடித்து பல ஆண்டுகள் ஆன பின்பு வகுப்பு தோழர்களை, தோழிகளை சந்திக்க நேர்ந்தால் ஏற்படும் ஆனந்தம் அலாதியானது. அந்த வகையில் இப்போது பல பள்ளிகளில் ‘ரி யூனியன்’ என்ற பெயரில் வகுப்பு தோழர்கள், பள்ளி நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு நாள் முழுவதும் கொண்டாடும் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. கேரளாவில் எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 35 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்களும், மாணவிகளும் சமீபத்தில் சந்தித்துக்கொண்டனர்.
இதில் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ஒரு மாணவரும், இடுக்கி பகுதியை சேர்ந்த மாணவியும் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரும் பள்ளியில் படித்த காலத்தில் காதல் வசப்பட்டு இருந்தனர். இப்போது போல அப்போது எடுத்த உடன் காதலை சொல்ல வழி இருக்கவில்லை. மனதில் ஏற்பட்ட காதல் உணர்வை சொல்லவே மாதக்கணக்கில் ஆகிவிடும். இப்படி அந்த மாணவரும், மாணவியும் தங்கள் காதலை வெளிப்படுத்திய போது குடும்ப சூழ்நிலை காரணமாக அவர்கள் பிரிந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால் இருவருக்குள்ளும் காதல் உணர்வு மட்டும் நீறுபூத்த நெருப்பாய் எரிந்து கொண்டிருந்தது. இதற்கிடையே இருவருக்கும் அவர்களின் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். அதன்பின்பு அவர்களுக்கென குடும்பம், குழந்தைகளும் பிறந்து விட்டனர். ஆனாலும் முதல் காதலும், அது நிறைவேறாத ஏக்கமும் இருவருக்குள்ளும் இருந்தது. இந்த நிலையில் தான் இவர்களின் வகுப்பு தோழர்கள் சேர்ந்து பள்ளியில் ‘ரி யூனியன்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். இதில் எர்ணாகுளம் மாணவரும், இடுக்கி மாணவியும் கலந்து கொண்டனர். 50 வயதை நெருங்கி விட்ட வகுப்பு தோழர்கள் அனைவரும் தாங்கள் படித்த வகுப்பறையில் சந்தித்து கொண்டனர்.
அங்கு எர்ணாகுளம் மாணவரும், இடுக்கி மாணவியும் வகுப்பறை பெஞ்சில் அமர்ந்திருந்த போது அவர்களுக்கு பள்ளி பருவத்தில் ஏற்பட்ட காதல் உணர்வு எட்டி பார்த்தது. உருகிபோன இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கண்களாலேயே பேசிக்கொண்டனர். இருவருக்கும் தனித்தனியாக திருமணம் ஆகி குழந்தைகளும் இருக்கும் நிலையில் முதல் காதலின் நினைவை மறக்க முடியாமல் தவித்தனர். இந்த தவிப்பை இருவரும் பகிர்ந்து கொண்டனர். அப்போது ஏற்பட்ட ஆர்வத்தில் ரி யூனியன் நிகழ்ச்சியில் இருந்து இருவரும் நைசாக வெளியே வந்து தனியாக பேசத்தொடங்கினர். இந்த பேச்சு நீண்டு கொண்டே சென்றது.
ரி யூனியன் நிகழ்ச்சி முடிந்த போது இருவரும் பள்ளியில் இருந்து மாயமாகி இருந்தனர். ரி யூனியன் நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் வீடு திரும்பாததால் அவர்களின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை தேடிய போதுதான் இருவரும் சேர்ந்தே மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதுபற்றி எர்ணாகுளம் போலீசில் உறவினர்கள் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜோடியை தேடி வருகிறார்கள். இது ரி யூனியன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.