;
Athirady Tamil News

எடப்பாடி பழனிசாமி மீது போலீசார் வழக்கு: தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் திடீர் போராட்டம்!!

0

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் மதுரை சென்றிருந்தார். அங்கு விமானத்தில் இருந்து இறங்கி வெளியே வருவதற்காக விமான நிலைய பஸ்சில் பயணம் செய்தார். அப்போது அவருடன் பயணித்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அ.ம.மு.க. பிரமுகர் ராஜேஸ்வரன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டார். அப்போது எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் வீடியோ எடுத்த வரை தடுத்தார். இது வலை தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அ.ம.மு.க. பிரமுகர் ராஜேஸ்வரன் அவனியாபுரம் போலீசில் அளித்த புகாரில் எடப்பாடி பழனிசாமி தூண்டுதலின் பேரில் அவரது பாதுகாவலர் மற்றும் சிலர் தன்னை தாக்கியதாக கூறி இருந்தார்.

இதேபோல் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் அவனியாபுரம் போலீசில் ராஜேஸ்வரன் மீது ஒரு புகார் கொடுத்தார். இரு தரப்பினரும் புகார் கொடுத்திருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது பாதுகாவலர் கிருஷ்ணன், செந்தில்நாதன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 5 பேர் மீது கொலை முயற்சி, செல்போன் பறிப்பு உள்பட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதை கண்டித்து அ.தி.மு.க.வினர் இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் திடீர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க. தலைமை கழகம் அருகே இருந்து ஊர்வலமாக கோஷமிட்ட படி நடந்து சென்ற அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஏராளமானோர் லாயிட்ஸ் ரோடு சந்திப்பில் திடீரென அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரவை இணை செயலாளர் முகில், மாநில அம்மா பேரவை துணை செயலாளரும், பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளருமான பெரும்பாக்கம் ராஜசேகர், முன்னாள் எம்.பி. ஜெயவர் தன் உள்பட ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட்டு கண்டன கோஷமிட்டனர். தி.மு.க. அரசு பொய் வழக்கு போடுவதையே வழக்கமாக வைத்திருப்பதாக குற்றம் சாட்டினர். சிறிது நேரம் கோஷமிட்ட அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. திருவொற்றியூர் தேரடி பகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ.கே.குப்பன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதில் கவுன்சிலர் டாக்டர் கே.கார்த்திக், எம்.டி.சேகர், முன்னாள் கவுன்சிலர் ஜோசப் உட்பட பலர் கலந்து கொண்டனர். மதுரையில் இன்று பழங்கா நத்தம் ரவுண்டானா அருகில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் கருப்புச்சட்டை அணிந்திருந்தனர்.

அவர்கள் தி.மு.க. அரசு மற்றும் போலீசாரை கண்டித்து கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. மாவட்ட துணை செயலாளர் வில்லாபுரம் ராஜா, முன்னாள் மேயர் திரவியம், நிர்வாகிகள் எம்.எஸ். பாண்டியன், அண்ணாதுரை, பைக்காரா கருப்புசாமி, சோலைராஜா, முத்துவேல், கலைச்செல்வம், கே.வி.கே. கண்ணன், பேரவை துணைச்செயலாளர் வெற்றிவேல், முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழுப்புரம் நகர அ.திமு.க சார்பில் விழுப்புரம்- புதுவை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே சாலை மறியல் நடைபெற்றது. நகர செயலாளர்கள் பசுபதி, வண்டிமேடு ராமதாஸ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள், மாவட்ட மாணவரணி செயலாளர் சகதிவேல், முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் செங்குட்டுவன், நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், நிர்வாகிகள் மந்தக்கரை ஜானகிராமன், ராஜகோபால், லியாகத் அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மறிய லில் ஈடுபட்ட 75 பேரை போலீசார் கைது செய்தனர். கண்டமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் புதுவை- விழுப்புரம் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மேல்மலையனூர் வடக்கு, தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.