கர்தினால் வெளியிட்ட முக்கிய அறிவித்தல் !!
பாராளுமன்ற சிறப்புரிமைகளின் அடிப்படையில் நீதிமன்றங்களில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்த கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், நீதித்துறையின் சுதந்திரம் பேணப்படுவதை உறுதி செய்வதற்கு இரு எம்.பி.க்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என்று தெரிவித்தார்.
கொழும்பில் திங்கட்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு குறித்து இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசியதாக செய்திகள் வெளியாகின என்றும் தமது பாராளுமன்ற சிறப்புரிமைகளை குறித்த தீர்மானம் மீறுவதாக அவர்கள் கூறியதாகவும் சுட்டிக்காட்டினார்.
எம்.பி.க்களின் இருவரினதும் இந்தக் கோரிக்கை உயர் நீதிமன்றத்தின் கண்ணியம் மற்றும் சுதந்திரத்துக்குப் பொருந்தாதது என்று தெரிவித்த அவர், நீதித்துறை சுதந்திரம் பேணப்படுவதை உறுதி செய்ய எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும், உயர்நீதிமன்றத்தினால் மார்ச் 3 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் பாராளுமன்றத்தை சமமாக கட்டுப்படுத்துகிறது என்பது தெளிவாகிறது என்றும் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.