ஆணைக்குழுவில் ஆஜராக அமைச்சர் டிரான் மறுப்பு !!
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் திங்கட்கிழமை (13) ஆஜராகுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஆணைக்குழுவில் ஆஜராக அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் குறித்து அறிவதற்கே ஆணைக்குழு அமைச்சருக்கு அறிவித்துள்ளது.
எனினும், உரிய முறைப்படி அழைப்பாணை பிறப்பிக்கப்படாமை காரணமாக, ஆணைக்குழுவில் ஆஜராகாமல் இருக்க அமைச்சர் தீர்மானித்துள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அமைச்சரை ஆணைக்குழுவின் முன்னிலையில் அழைப்பதற்கான தீர்மானம் அதன் தலைவரால் எடுக்கப்பட்டதாக தெரிவித்த அந்த பேச்சாளர், ஆணைக்குழுவின் ஏனைய நான்கு உறுப்பினர்களும் அழைப்பாணை குறித்து அறிந்திருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்த தீர்மானம் தொடர்பில் அமைச்சர் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மார்ச் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் கொழும்பு மற்றும் களனி பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட்ட போராட்டங்களைக் கட்டுப்படுத்த பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு ஆணைக்குழு தீர்மானித்து அழைப்பாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.