பேச்சுக்கு வராவிட்டால் நாளை நாடு முடங்கும்?
பேச்சுவார்த்தைக்கு வர அரசாங்கம் மறுத்தால், நாளை புதன்கிழமை (15) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
குறைந்தபட்சம் ஆறு மாத காலத்துக்கு எந்தவொரு வரியையும் அரசாங்கத்தால் மாற்றியமைக்க முடியாது என்று நிபுணத்துவ தொழிற்சங்கக் கூட்டமைப்பு வெள்ளிக்கிழமையன்று நிதியமைச்சின் செயலாளரைச் சந்தித்த போது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், புதன்கிழமைக்கு முன்னர் பேச்சுவார்த்தையில் ஈடுபட அரசாங்கம் மறுப்பு தெரிவித்தால் சுகாதாரம், கல்விச்சேவை, நீர் விநியோகம், மின்சாரம், தாதிமார், ஆசிரியர் சேவை, அரச மற்றும் அரசு சார் தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அன்றையதினத்தில் அனைத்து வைத்தியர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
மகப்பேறு மற்றும் சிறுவர் வைத்தியசாலைகள், தேசிய புற்றுநோய் நிறுவனம், தேசிய மனநல நிறுவனம், சிறுநீரக சிகிச்சை பிரிவுகள், இராணுவ வைத்தியசாலைகள் மற்றும் அவசர சிகிச்சைகள் பாதிக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்தார்.
பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் நாளை 15ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் சன்ன திஸாநாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, கொழும்பு லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் இன்று (14) போராட்டங்கள் இடம்பெறவுள்ளதுடன், இலங்கையின் முக்கிய நகரங்களில் மற்ற போராட்டங்கள் நடைபெறும் என்றும் தெரியவருகிறது.