வெளிநாட்டு பரிசு பொருட்களை வைத்திருப்பது யார்? பாக். அரசு இணையத்தில் பட்டியல் வெளியீடு !!
பாகிஸ்தானில் வெளிநாட்டு பரிசு பொருட்களை வைத்திருக்கும் அரசு உயரதிகாரிகள், பிரதமர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்டவர்கள் குறித்த பட்டியலை அந்நாட்டு அரசு நேற்று முன்தினம் இணையத்தில் பகிரங்கமாக வெளியிட்டது. பாகிஸ்தானில் வெளிநாட்டு தலைவர்கள் வழங்கிய பரிசு பொருட்களை விற்ற விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரானுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 2002ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை முன்னாள் அதிபர்கள், முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஓய்வு பெற்ற ஜெனரல்கள், நீதிபதிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் வைத்திருக்கும் வெளிநாட்டு பரிசு பொருட்கள் குறித்த தோஷகானா எனப்படும் அரசு கருவூலத்தில் உள்ள விவரங்களை முதல் முறையாக அரசு பகிரங்கப்படுத்தியுள்ளது.
அமைச்சரவையின் இணையதள பக்கத்தில் 446 பக்கங்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பயன் அடைந்தவர்களின் பெயர்கள், பரிசு பொருட்கள், எவ்வளவு கொடுத்து பரிசு பொருட்களை பெற்றனர் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரு சில பரிசு பொருட்களை தவிர மற்ற அனைத்தும் இலவசமாக பரிசு பெற்ற உரிமையாளர்களால் எடுத்து செல்லப்பட்டுள்ளது. சர்தாரி மற்றும் நவாஸ் ஆகியோர் தங்களுக்கு பரிசாக கிடைத்த குண்டு துளைக்காத வாகனங்களை தோஷகானாவுக்கு பணம் செலுத்திய பிறகு எடுத்து சென்றுள்ளனர்.