2 வழக்குகளில் இம்ரானுக்கு ஜாமீனில் வரமுடியாத கைது வாரண்ட்!!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரானுக்கு எதிராக ஜாமீனில் வெளியே வரமுடியாத 2 கைது வாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் சார்பில் நடந்த பேரணியில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொண்டார். அப்போது பேசிய இம்ரான், கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதி ஜீபா சவுத்ரி மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் தனது கட்சிக்கு எதிரான பாரபட்சமான நடவடிக்கைக்காக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுக்கும் வகையில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதி ராணா முஜாகித் ரகீம், இம்ரானுக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத கைது வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். வருகிற 21 தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதியின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் தோஷகானா வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதி ஜாபர் இக்பால், இம்ரானுக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பித்ததோடு, வருகிற 18ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.