;
Athirady Tamil News

மகாராஷ்டிராவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் பலி !!

0

மத்திய பிரதேச மாநிலம் புர்கன்பூர் மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி. ஒருவர் தனது மனைவியுடன் மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகர் சோபரா கிராமத்தில் தங்கி கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவர்களுடன் இருந்த 5 வயது மகன் சாகர் புத்தா பரலோ நேற்று மதியம் அங்குள்ள ஒரு விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது அவன் திடீரென மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். சுமார் 200 அடி ஆழம் கொண்ட அந்த ஆழ்துளை கிணற்றின் பாதியில் சிக்கி கொண்டான். உயிர் பயத்தில் அவன் கதறி அழுதான். இதைக்கேட்டு அருகில் கரும்பு வெட்டிக்கொண்டு இருந்த அவனது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து அங்கு ஓடி வந்தனர். இது பற்றி உடனே போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஜே.சி.பி. எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. சிறுவனை உயிருடன் மீட்க ஆழ்துளை கிணற்றின் அருகில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. சிறுவனுக்கு கயிறு மூலம் தண்ணீர் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆம்புலன்சு வாகனங்கள் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர். நேற்று நள்ளிரவு வரை மீட்பு பணி தொடர்ந்து நடந்தது. இரவு நேரம் என்பதால் விளக்கு வெளிச்சத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சிறுவனை காப்பாற்ற போராடினார்கள். ஆனால் அவர்களது முயற்சிக்கு பலன் அளிக்கவில்லை. சிறிது நேரம் சிறுவன் அழுதுகொண்டே இருந்தான். ஆனால் அதன் பிறகு அவனிடம் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. இன்று அதிகாலை சாகர் புத்தா பரேலா பிணமாக தான் மீட்கப்பட்டான். மகன் பிணத்தை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இது அங்கு திரண்டு இருந்த கிராம மக்களின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. சமீப காலமாக ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழுந்து இறக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதில் ஒரு சிலர் மட்டுமே உயிருடன் மீட்கப்படுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.