மீண்டும் 11 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யும் மார்க் ஜூக்கர்பர்க்!!
கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த ஆண்டு துவக்கம் முதலே ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள துவங்கிவிட்டன. இதன் காரணமாக உலகளவில் பெரும்பாலானோர் தங்களது வேலையை இழந்தனர். சந்தை நிலையை கருத்தில் கொண்டு மேலும் சில நிறுவனங்கள் இரண்டாவது கட்டமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்வது பற்றி பரிசீலனை செய்து வருகின்றன. இந்த வரிசையில் மார்க் ஜூக்கர்பர்க் மெட்டா பிரிவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் முறை எத்தனை பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனரோ, அதே எண்ணிக்கையில் மீண்டும் பணிநீக்கம் செய்ய மெட்டா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதன் காரணமாக விரைவில் சுமார் 11 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. புதிய பணி நீக்க நடவடிக்கைகள் விரைவில் துவங்கும் என்றும் மார்க் ஜூக்கர்பர்க் தனது மூன்றாவது குழந்தை பிறக்க இருப்பதை அடுத்து மகப்பேறு விடுப்புக்கு செல்லும் முன் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட பின் மார்க் ஜூக்கர்பர்க் 2023 ஆண்டு நிறுவனத்திற்கு சிறப்பானதாக இருக்கும் என தெரிவித்து இருந்தார். ஏற்கனவே ஒட்டுமொத்த ஊழியர்களில் சுமார் 13 சதவீதம், கிட்டத்தட்ட 11 ஆயிரம் ஊழியர்களை கடந்த ஆண்டு மெட்டா நிறுவனம் பணிநீக்கம் செய்து இருந்தது. இவர்கள் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் பணியாற்றி வந்தனர். நிதி நெருக்கடி மற்றும் வருவாய் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.