கவர்னர் தமிழிசைக்கு எதிரான தெலுங்கானா அரசின் மனு மீது 20-ந் தேதி விசாரணை!!
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக தெலுங்கானா அரசு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தது. தெலுங்கானா தலைமைச் செயலர் ஏ.சாந்தி குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- தெலுங்கானா சட்டப்பேரவையில் தெலுங்கானா முனிசிபல் திருத்த மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, மசோதாக்கள் கடந்த 2022, செப்டம்பர் 14-ந் தேதி தொடங்கி நிலுவையில் இருந்து வருகின்றன. கவர்னர் சுயமாக செயல்படக்கூடாது என ஷம்சீர் சிங் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அரசியல்சாசன அமர்வு தெளிவுப்படுத்தி உள்ளது. மீண்டும் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கும்போது அதற்கு மறுப்பு கூற முடியாது.
எனவே, கவர்னரின் செயல்பாட்டை வழக்கத்துக்கு மாறான, சட்டவிரோதமான, அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமைகளுக்கு எதிரான செயல் என அறிவிக்க வேண்டும். நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க ஆளுனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி தெலுங்கானா அரசின் சார்பில் மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே முன்வைத்த முறையீட்டை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, மார்ச் 20-ந் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.