ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுவன் பலி- 40 மணி நேர போராட்டத்திற்கு பின் உடல் மீட்பு!!
மத்தியபிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கெர்கேடிபத்தர் கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் லோகேஷ் அகிர்வார் நேற்று அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்கு தோண்டப்பட்ட 60 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கும், மீட்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனை பாதுகாப்பாக காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்ட ஜேசிபி எந்திரங்கள் மூலம் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறுவனின் உடல்நிலையை கண்காணிக்க கேமிரா ஒன்று ஆழ்துளை கிணற்றில் இறக்கப்பட்டுள்ளது. தற்போது கிணற்றில் 43 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு சமீர்யாதவ் கூறுகையில், ஆழ்துளை கிணற்றில் ஆக்சிஜன் சப்ளை செய்யப்படுகிறது. இருப்பினும் சிறுவனிடம் இன்னும் பேச முடியவில்லை. சிறுவனை கண்டுபிடிக்க வெப் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்பு படையின் 3 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு பணியை துரிதப்படுத்தி வருகின்றனர். கிணற்றுக்குள் சில அசைவுகள் தென்படுகிறது. இது சிறுவன் உயிருடன் இருப்பதற்கான அறிகுறி. கிணற்றை ஒட்டி குழி தோண்டப்பட்டு வருகிறது. விரைவில் சிறுவன் மீட்கப்படுவான் என்றார். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்ற நிலையில் 40 மணி நேர போராட்டத்திற்கு பின் சிறுவன் மீட்கப்பட்டான். உடனடியாக அவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பலியான சிறுவன் குடும்பத்திற்கு மத்தியபிரதேச அரசு சார்பில் ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.