ரெயில்வே பணிக்கு லஞ்சம் பெற்ற வழக்கு- லாலு பிரசாத் யாதவ், மனைவி, மகளுக்கு ஜாமீன்!!
ராஷ்டிரிய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் 2004-2009 வரை மத்திய மந்திரியாக இருந்தார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது அவர் மத்திய ரெயில்வே மந்திரியாக பணியாற்றினார். அப்போது இந்திய ரெயில்வேயில் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக லாலு பிரசாத் யாதவ் மீது குற்றம் சாட்டப்பட்டது. பலரிடம் நிலத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு ரெயில்வேயில் வேலை வழங்கியதாக அவர் மீது புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. லாலு பிரசாத் யாதவின் குடும்பத்தினரும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான ராப்ரிதேவி உள்பட 14 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. ரெயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் வாங்கிய வழக்கு தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்ப உறவினர்கள் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தி இருந்தது.
இதற்கிடையே லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரிதேவி, மகள் மிசா பாரதி உள்பட 14 பேர் இந்த வழக்கில் இன்று (15-ந்தேதி) ஆஜராக டெல்லி சிறப்பு கோர்ட்டு நீதிபதி கீதாஞ்சலி கோயல் கடந்த 27-ந்தேதி சம்மன் அனுப்பினார். இதை தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ் இன்று டெல்லி கோர்ட்டில் ஆஜரானார். வீல் சேரில் அவர் கோர்ட்டுக்கு காலை 10 மணிக்கு வந்தார். 3 மாதங்களுக்கு முன்பு அவர் சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த சிகிச்சைக்கு பிறகு லாலு முதல் முறையாக கோர்ட்டு வந்தார். மனைவி ராப்ரிதேவி, மகள் மிசா பாரதி ஆகியோரும் இன்று கோர்ட்டில் ஆஜரானார்கள். காலை 11 மணிக்கு தான் கோர்ட்டு நடவடிக்கைகள் தொடங்கியது.
ரெயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில் லாலு பிரசாத் யாதவ், ராப்ரிதேவி, மிசா பாரதி ஆகியோருக்கு டெல்லி கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. ஜாமீன் பெற்றதால் லாலுவுக்கு பெரும் நிம்மதி ஏற்பட்டது. அவர் கால்நடை தீவன ஊழல் வழக்கில் ஏற்கனவே பல ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து இருந்தார். இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவின் உதவியாளர் போலோ யாதவ் கடந்த ஜூலை மாதம் கைதாகி இருந்தார்.