திடீரென வெடித்துச் சிதறிய ஸ்மார்ட்போன்!!
ஸ்மார்ட்போன்கள் வெடித்துச் சிதறும் சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றன. கடந்த காலங்களில் சியோமி, ஒன்பிளஸ், சாம்சங் என பல்வேறு பிராண்டு ஸ்மார்ட்போன்கள் வெடித்து சிதறியுள்ளன. அந்த வகையில், தற்போது சியோமி 11 லைட் NE 5ஜி ஸ்மார்ட்போன் வெடித்து இருக்கிறது. பீகார் மாநிலத்தின் சஞ்சீவ் ராஜா என்பவர் பயன்படுத்தி வந்த ஸ்மார்ட்போன் திடீரென வெடித்து, அதில் இருந்து புகை வெளியேறி இருக்கிறது. சார்ஜர் எதிலும் இணைக்கப்படாத நிலையில், ஸ்மார்ட்போன் வெடித்ததாக கூறி அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்களை சஞ்சீவ் ராஜா தனியார் செய்தி நிறுவனத்துடன் பகிர்ந்து இருக்கிறார்.
ஸ்மார்ட்போன் வெடித்ததற்கான காரணம் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. ஸ்மார்ட்போன் வெடிக்கும் போது கட்டிலில் வைக்கப்பட்டு இருந்ததால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது வெடித்துச் சிதறிய சியோமி 11 லைட் NE 5ஜி ஸ்மார்ட்போன் 2021 டிசம்பர் மாத வாக்கில் வாங்கப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட்போன் வெடித்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்க்கும் போது பேட்டரியில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் என்றே தெரிகிறது. ஸ்மார்ட்போன் வெடித்த சம்பவம் குறித்து சியோமி தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.