டாப் 10-இல் இடம்பிடித்த 8 ஐபோன்கள் – விற்பனையில் மாஸ் காட்டிய ஆப்பிள்!!!
2022 ஆண்டு ஆப்பிள் நிறுவனத்திற்கு தலைசிறந்த ஒன்றாக அமைந்து இருந்ததாக ஆய்வு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. உலகளவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிள் கணிசமான பங்குகளை பெற்று இருக்கிறது. உலகளவில் அதிகம் விற்பனையாகும் டாப் 10 ஸ்மார்ட்போன்களில் எட்டு மாடல்கள் ஐபோன் ஆகும். 2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 13 அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் ஆக இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் அடுத்தடுத்த இடங்களை பிடித்து இருக்கின்றன. இந்த பட்டியலில் ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 12, ஐபோன் 14, ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் SE 2022 உள்ளிட்ட மாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த பட்டியலில் சாம்சங் நிறுவனத்தின் இரண்டு எண்ட்ரி லெவல் கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இடம்பிடித்துள்ளன. கவுண்டர்பாயிண்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போனாக ஐபோன் 13 உள்ளது. 2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 13 மாடலில் ஆப்பிள் நிறுவனத்தின் A15 பயோனிக் சிப் உள்ளது. ஒட்டுமொத்த ஐபோன் விற்பனையில் 28 சதவீதம் ஐபோன் 13 மாடல் ஆகும்.
ஐபோன் 14 சீரிஸ் வெளியீட்டை தொடர்ந்து ஐபோன் 13 மாடலுக்கு அறிவிக்கப்பட்ட விலை குறைப்பு காரணமாக இதன் விற்பனை அதிகரித்து இருக்கும் என தெரிகிறது. சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஐபோன் 13 அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் ஆக இருந்துள்ளது. இந்த பட்டியலில் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன. 2022 ஆண்டு ப்ரோ மேக்ஸ் சீரிஸ் விற்பனை ப்ரோ மற்றும் பேஸ் வேரியண்ட்களை விட அதிகமாக இருந்துள்ளது.
சாம்சங்கின் கேலக்ஸி A13 மாடல் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் நான்காவது இடத்திலும், ஐபோன் 13 ப்ரோ மாடல் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன. ஐபோன் 12 மாடல் ஆறாவது இடம், ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ரோ மாடல்கள் முறையே ஏழு மற்றும் எட்டாவது இடங்களை பிடித்துள்ளன. ஐபோன் SE 2022 மாடல் ஒன்பதாவது இடமும், சாம்சங் கேலக்ஸி A03 மாடல் பத்தாவது இடத்தை பிடித்துள்ளன. அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன் மாடல்களில் எட்டு இடங்களை பிடித்திருக்கும் முதல் நிறுவனமாக ஆப்பிள் உள்ளது.