;
Athirady Tamil News

9 ஆண்டுகால ஆட்சியில் பா.ஜனதா செய்த சாதனைகள் துறை வாரியாக பட்டியல் தயாரிக்கிறார்கள்!!

0

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா 2-வது முறையாக ஆட்சியை பிடித்து வருகிற மே மாதத்துடன் 9 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. மேலும் அடுத்த ஆண்டில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. எனவே தேர்தலை சந்திக்கும் வகையில் கடந்த 9 ஆண்டுகளில் பா.ஜனதா அரசு செய்துள்ள சாதனைகளை துறைவாரியாக அறிக்கை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மிகப்பெரிய திட்டங்கள் அனைத்தும் இந்த அறிக்கையில் இடம்பெற உள்ளது. இதுதொடர்பாக மத்திய மந்திரிகள் பியூஷ்கோயல், ஸ்மிருதி இரானி, எல். முருகன், கிஷன் ரெட்டி, பாரதிபவார், அர்ஜூன்லால் மெக்வால், பிரகலாத் ஜோஷி, தர்மேந்திரபிரதான் உள்ளிட்ட மந்திரிகள் குழு டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தியது. கடந்த 2015 முதல் பிரதமர் மோடி செயல்படுத்தி வரும் திட்டங்களால் பயன் அடைந்த பயனாளிகள் அரசுக்கு பக்கபலமாக இருப்பார்கள் என்று நம்புகிறார்கள். எனவே அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் நினைவுப்படுத்தும் வகையில் இந்த பட்டியலை தயாரித்து நாடு முழுவதும் பரப்ப திட்டமிட்டுள்ளார்கள். இதுதவிர முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி பா.ஜனதா என்ற பிரசாரத்தை முறியடிக்கவும் தனியாக ஒரு சாதாரண பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

அதாவது கடந்த 9 ஆண்டுகளில் முஸ்லிம்களுக்காக மோடி அரசு செய்துள்ள சாதனைகள், சாதி, இன, மத பாகுபாடின்றி நாட்டின் வளர்ச்சியை மட்டுமே அடிப்படையாக கொண்டு நிறைவேற்றி இருக்கும் சாதனை திட்டங்கள் பற்றிய பட்டியலும் தயார் செய்யப்படுகிறது. அதைத்தொடர்ந்து கட்சி சாராத அமைப்புகள், இஸ்லாமிய பிரதிநிதிகள் பங்கேற்கும் பிரமாண்ட கூட்டங்களையும் நடத்த மோடி திட்டமிட்டுள்ளார். 20 சதவீதம் வரை இஸ்லாமியர்கள் வாழும் தொகுதிகள் கணக்கெடுக்கப்படுகிறது. ஆந்திரா, தெலுங்கானா உள்பட 30 மாநிலங்களில் இந்த கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். அந்த கூட்டங்களில் தனது அரசு இஸ்லாமியர்களுக்காக செய்துள்ள திட்டங்கள் பற்றி மோடி விளக்கி பிரசாரம் செய்வார் என்று கூறப்படுகிறது. மேலும் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் அரசின் சாதனைகளை ஊடகங்கள், கலைநிகழ்ச்சிகள் மூலமும் மக்களிடம் கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.