புனேயில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது!!
புனேயில் பாகிஸ்தானை சேர்ந்த 22 வயது வாலிபர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது தெரியவந்ததாவது:- பாகிஸ்தானில் உள்ள கராச்சியை சேர்ந்தவர் முகமது அமன் அன்சாரி. இவர் பாகிஸ்தானை சேர்ந்த தந்தைக்கும், இந்திய தாய்க்கும் கராச்சியில் பிறந்தவர். அன்சாரியின் பெற்றோர் துபாயிக்கு சென்றுவிட்டனர். அங்கு தான் அன்சாரி படித்து இருக்கிறார்.
2015-ம் ஆண்டு அன்சாரி தாயுடன் புனே வந்தார். அப்போது அவரிடம் இந்தியாவில் தங்குவதற்கான விசா இருந்தது. இந்தநிலையில் அன்சாரி புனேயில் தங்கி கல்லூரி படிப்பையும் தொடர்ந்து இருக்கிறார். அவரது விசாக்காலமும் முடிந்து உள்ளது. விசாகாலம் முடிந்த பிறகு அவர் அதை புதுப்பிக்கவில்லை. இந்திய குடியுரிமை பெறுவதற்கும் முயற்சி செய்யவில்லை. அவர் சட்டவிரோதமாக ஆதார் அட்டை வாங்கினார். அதன் மூலம் இந்திய பாஸ்போர்ட்டும் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அன்சாரியை கைது செய்தனர். அவர் எப்படி ஆதார் கார்டு, பாஸ்போர்ட் பெற்றார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.