யாழில் போசாக்கின்மையால் 2 மாதக் குழந்தை மரணம்!!
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, குடத்தனை பகுதியில் பிறந்து 52 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் குழந்தையின் இறப்புக்கு போதிய போசாக்கின்மையே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண் குழந்தை மூச்சயர்ந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
இம் மரணம் தொடர்பில் தும்பளை திடீர் மரண விசாரணை அதிகாரி திருமதி அன்ரலா விஞ்சன்தயான் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
உடற்கூற்று பரிசோதனை 15 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற நிலையில், போதிய போசாக்கின்மை காரணமாக உயிரிழப்பு இடம்பெற்றதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் அந்தரித்துவரும் நிலையில், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தை பிரசவித்த தாய்மார்கள், குழந்தைகளின் போசாக்கு விடயத்தில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாய தேவை இதன் மூலம் உணரப்பட்டுள்ளது.