பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு? வைரல் செய்தியை மறுத்த நோபல் கமிட்டி துணைத் தலைவர்!!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமைதிக்கான நோபல் பரிசை வெல்வதற்கு தகுதியானவர் என்றும், அமைதிக்கான நோபல் பரிசுக்கான மிகப்பெரிய போட்டியாளராக பிரதமர் மோடி இருப்பதாகவும் நோபல் கமிட்டியின் துணைத்தலைவர் ஆஸ்லே டோஜே கூறியதாக தகவல் வெளியானது. நான் மோடியின் மிக பெரிய ரசிகர், பிரதமர் மோடியின் கொள்கைகளால் இந்தியா பணக்கார மற்றும் சக்திவாய்ந்த நாடாக வளர்ந்து வருகிறது. பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசை வென்றால், அது தகுதியான தலைவருக்கு கொடுக்கப்பட்ட ஒரு வரலாற்று தருணமாக இருக்கும் என்றும் அவர் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது- ஆனால் இந்த செய்தியை நோபல் கமிட்டி துணைத்தலைவர் ஆஸ்லே டோஜே மறுத்துள்ளார். பிரதமர் மோடி குறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என அவர் தெரிவித்தார். இது தெடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், ‘ஒரு போலி செய்தி ட்வீட் அனுப்பப்பட்டிருகிறது. அதை நாம் போலி செய்தியாக கருதவேண்டும். அதைப் பற்றி விவாதிக்க வேண்டாம். அந்த ட்வீட்டில் இருந்த தகவல்களை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன்’ என்றார்.
நார்வேயைச் சேர்ந்த நோபல் கமிட்டியானது, அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவரை தேர்ந்தெடுக்கும் அமைப்பாகும். இந்த குழு தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், மோடி தொடர்பான செய்தி பரவி வருகிறது. உலகில் அமைதியான சூழலை உருவாக்குவதற்கும் மோதல்களைத் தீர்ப்பதற்கும் சிறந்த பங்களிப்பைச் செய்தவர்களை அங்கீகரிக்கும் வகையில், அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. உலகின் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் இதுவும் ஒன்று. அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் மோடியின் பெயர் இதற்கு முன் பலமுறை முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.